ஜீவ சமாதி பதிவு தமிழில்
சித்தயோகி பிரம்மஸ்ரீ சாமய்யா |
சுவாமி சாமய்யாவின் குருநாதர் சித்த சமாஜ ஸ்தாபகர் சுவாமி சிவானந்த பரமஹம்சர் |
நதிகள் பலவாயினும் அது பயனித்து கடலையே சேருகிறது. வழிகள் பலவாயினும் ஆத்மா பயனித்து ஒரே மூலத்தையே அடைகிறது. இறைநிலைப் பயணத்திற்கு பல வழிமுறைகளை ஆசான்கள் வகுத்துள்ளார்கள். அவற்றில் ஒன்று சித்த சமாஜ நிறுவனர் சுவாமி சிவானந்த பரமஹம்சரால் வகுக்கப்பட்ட எனும் இறைப்பயண வழிகாட்டியாகும். இதைப்பின்பற்றி இறைநிலையை எய்தியவர்கள் பலர். அவர்களில் ஒருவர்தான் யோகி சாமய்யா.
கோவை மாநகரத்திலிருந்து பனிரெண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பன்னிமடை (பண்ணீர்மடை) என்ற கிராமம். இங்கு 1892 ஆகஸ்ட் 15 ஆம் நாள் பிறந்தவர் யோகி சாமய்யா. சிறுவயதிலேயே அளவற்ற பக்தி செய்து வாழ்ந்தார் யோகி சாமய்யா. தனது பனிரெண்டாவது வயதில் தவம் செய்யத் துவங்கினார். தவம் செய்தால் உலக வாழ்க்கையில் பற்று இல்லாமல் போய்விடும் என்று எண்ணிய அவர் பெற்றோர்கள். இளம்வயதிலேயே தம் குடும்பத் தொழிலில் ஈடுபடுத்தினார்கள். பிறகு திருமணம் செய்து வைத்தார்கள். இல்லற வாழ்வில் இனிதே ஈடுபட்ட சிறிது காலத்தில் உலக மயக்கம் என்ற கண்ணாடித்திரை விலகியது. தன் பிறவியின் நோக்கம் நினைவிற்கு வந்தது.
1929-இல் இவரை சந்தித்த சைவ சமய யோகி "நீ பெரிய மகானாவாய்; சமாதி நிலை அடைவாய்", என வாழ்த்திச்சென்றார். சுமார் பத்து ஆண்டுகள் கழித்து தன் இமாலய யாத்திரையை முடித்துத் திரும்பி வந்து கொண்டிருந்த சித்த யோகத்தின் தந்தை சுவாமி சிவானந்த பரமஹம்சரை சந்தித்து முறைப்படி உபதேசம் பெற்றார். அதை தொடர்ந்து கடும் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.
அன்றைய ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இருந்த கவர்னர் ஜெனரல் 'எர்வின் ' கோவையில் நகர்வலம் வந்தார். அப்போது யோகி சாமய்யா சாலையை கடக்க குறுக்கே சென்று விட்டார். கோபம் கொண்ட ஜெனரல் "அந்த பிச்சைக்காரனை அப்புறப்படுத்துங்கள்" என்று ஆணையிட்டார். தன்னை அகற்ற வந்தவர்களை நோக்கி "நில்" என சைகை செய்தார். அவர்கள் உட்பட குதிரைகளும் நகரமுடியாமல் நின்றுவிட்டன. அவர் மகிமை உணர்ந்த ஜெனரல் மன்னிப்புக் கோரிய பின்பே வண்டி நகர்ந்தது.
மூதறிஞர் ராஜாஜி அவர்கள் 1937 ஆம் ஆண்டு காங்கிரஸ் மாநாட்டிற்காக கோவை வந்திருந்தார். அச்சமயம் யோகி சாமய்யாவை சந்தித்து. "இந்தியாவிற்கு சுதந்திரம் எப்பொழுது கிடைக்கும்?" என்று கேட்டார்கள். அதற்கு யோகி சாமய்யா, "நான் ஜீவ சமாதி சென்று பத்து ஆண்டுகளுக்கு பின் கிடைக்கும்", என்றார்.
அதேபோன்று யோகி சாமய்யா மகாசமாதி நிலை அடைவதை மூன்று
மாதங்களுக்கு முன்பே தெரிவித்துவிட்டு 1937 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ம் நாள், உற்றார், உறவினர், ஊரார் முன்னிலையில் தன் தங்கையை அழைத்து தான் ஜீவ சமாதி அடையக்கூடிய நேரம் வந்துவிட்டது என்று கூறி தனது தங்கையின் மடியில் அவரது தலையை வைத்தார், பிறகு இரு கண்களும் கற கற வென சுற்றி நின்று ஜீவ சமாதியில் ஆழ்ந்தார்! ஆனால் சமாதியின் முறை அறியாத கிராம மக்கள் மற்றும் அவரது உறவினர்கள் அவரை சாதாரணமாக மண்ணில் புதைத்து விட்டனர்.
மலேசிய பயணத்திலிருந்த அவருடைய குரு சிவானந்த பரமஹம்சருக்கு ஞான திருஸ்டியில் இது தெரியவர, தம் பயணத்தை முடித்துக்கொண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு கோவை பன்னிமடை வந்து மண்ணில் புதைக்கப்பட்டு இருந்த யோகி சாமய்யாவின் உடலை வெளியே ஏடுத்தார்கள். உடல் கெடாமல் வெதுவெதுப்பாக இருந்தது. அவர் மீது குருவின் கைகள் பட்ட உடனேயே யோகி சாமய்யாவின் கண்களிலிருந்து நீர் தாரைதாரையாகச் சொறிவதை கண்ட மக்கள் மகாசமாதியின் மகத்துவத்தைக் கண்டு வியந்தனர். பின்பு யோகி சாமய்யாவின் விருப்பப்படியே குருவின் கைகளாலேயே அவருக்கு முறைப்படி சமாதி வைக்கப்பட்டது! அவருடைய குருபூஜை ஆண்டுதோறும் சுதந்திரதினமான ஆகஸ்ட் 15-ல் நடைபெற்று வருகிறது.
குரு வாழ்க! குருவே துணை!!
ReplyDelete